பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் தமிழகம் திரும்ப உதவிகள் அறிவித்து முதல்-அமைச்சர் உத்தரவு


பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் தமிழகம் திரும்ப உதவிகள் அறிவித்து முதல்-அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2017 7:11 PM IST (Updated: 6 Dec 2017 7:11 PM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் டீசல் வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.


சென்னை,

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடந்த 30-ந் தேதி ‘ஒகி’ புயல் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்தது. அப்போது கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருந்த மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். மீனவர்கள் மாயமாகினர். மாயமான மீனவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இறங்கியது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் தாக்கிய நிலையில் மீனவர்கள் பிற மாநிலங்களில் பத்திரமாக கரை சேர்ந்தனர். குஜராத், கர்நாடகம், லட்சத்தீவு மற்றும் மராட்டிய மாநில கடற்கரையில் கரை சேர்ந்த மீனவர்கள் அங்கு தங்கி உள்ளனர். அங்குள்ள மீனவர்கள் உணவுப்பொருட்கள் மற்றும் டீசல் பற்றாக்குறையால் தவித்து வருகிறார்கள். மீனவர்கள் தங்களுடைய படகுகளும் சேதம் அடைந்து உள்ளது எனவும் தெரிவித்து உள்ளனர். 

அவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு உதவிகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதற்கிடையே கடலில் மாயமான மீனவர்களை மீட்பது தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். வெளி மாநிலங்களில் பத்திரமாக கரை ஒதுங்கிய மீனவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப உதவிகளை அரசு அறிவித்து உள்ளது.

அனைத்து மீனவர்களையும் மீட்கும் வரையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஆலோசனையின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு மீட்பு உள்ளிட்ட தகவல்களை அளிக்க உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
மீனவர்களை படகுகளுடன் மீட்டு சொந்த ஊர் அழைத்து வர மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் வழங்கவும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெய் வழங்கவும், மீனவர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்க தலா ரூ.1000 வழங்கவும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே மீனவர்கள் தங்களுடைய படகுகளும் சேதம் அடைந்து உள்ளனர் என குற்றம் சாட்டிஉள்ளனர், அவற்றை பார்வையிடவும் மீன்வளத்துறை அதிகாரிகள் செல்கிறார். படகுகளை அங்கேயே சரிசெய்யலாமா என்று அவர்கள் ஆலோசிக்கிறார்கள்.

அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களை பத்திரமாக அழைத்து வர அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். மாநிலவாரியாக செல்ல வேண்டிய அதிகாரிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள தமிழக மீனவர்கள், திரும்பி செல்ல இப்போது அறிவித்துள்ள டீசல் போதாது மற்றும் ரூ. 1000 உதவித்தொகை போதாது என தெரிவித்து உள்ளனர். மாநில அரசு எடுத்து உள்ள நடவடிக்கை சிறப்பானது விரைந்து நாங்கள் மாநிலம் திரும்ப நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் கூறிஉள்ளனர். உதவி தொகையை ரூ. 1000த்திற்கு அதிகமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதள வசதியுடன் கூடிய பிரத்யேக கடலோர காவல்படை நிலையம் தேவை என இந்திய கடலோர காவல்படைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார். 


Next Story