குடித்ததால் தகராறு:காதல் திருமணம் செய்த இளம்பெண் உயிருடன் எரித்துக்கொலை கணவரும் பலி


குடித்ததால் தகராறு:காதல் திருமணம் செய்த இளம்பெண் உயிருடன் எரித்துக்கொலை கணவரும் பலி
x
தினத்தந்தி 7 Dec 2017 3:45 AM IST (Updated: 7 Dec 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

வட்டிக்கு பணம் வாங்கி குடித்ததால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவர், தீயில் கருகி இறந்தார்.

ஆலந்தூர்,

வட்டிக்கு பணம் வாங்கி குடித்ததால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவர், தீயில் கருகி இறந்தார்.

இதனால் அவர்களின் 2 மகன்களும் அனாதைகளாக நிற்கும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த மேடவாக்கம் ராம்தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 34). இவருடைய மனைவி சந்தியா(32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெய்விக்ரம்(6), ஜெய்சரண்(3) என 2 மகன்கள் உள்ளனர்.

காவலாளியாக வேலை செய்து வந்த ராஜேஷ், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாக தெரிகிறது. அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவர் வேலைக்கு செல்லாததால் தனது 2 மகன்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சந்தியா, மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சந்தியா வீட்டுக்கு வந்தார். அப்போது தனது கணவர், குடிபோதையில் இருப்பதை கண்ட அவர், குடிக்க பணம் எப்படி வந்தது? என கேட்டார். அதற்கு ராஜேஷ், வட்டிக்கு பணம் வாங்கி குடித்ததாக கூறினார்.

இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது காதல் மனைவி சந்தியா மீது ஊற்றி, தீ வைத்து விட்டார்.

உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் சந்தியா, தனது கணவர் தப்பி ஓடிவிடாதபடி கட்டிப்பிடித்துக் கொண்டார். இதில் ராஜேஷ் உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது.

இதை கண்ட அவர்களுடைய மகன்கள் இருவரும், “எங்கள் அம்மா மீது அப்பா தீ வைத்து விட்டார்” என்று சத்தம் போட்டபடி அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர்.

2 பேர் உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். அப்போது சந்தியா, அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டிக்கு பணம் வாங்கி குடித்ததால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஒரே நேரத்தில் தாய்-தந்தையை இழந்து அவர்களின் 2 குழந்தைகளும் அனாதைகளாகி நிற்கின்றனர். இது அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story