அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 7 Dec 2017 2:11 PM IST (Updated: 7 Dec 2017 2:11 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை, 

அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக  மாறியது.

முதலில் இது புயல் சின்னமாக மாறி வட தமிழகம் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிக பலத்த மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகம்- சுழற்சி காரணமாக அது புயல் சின்னமாக உருவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தொடர்ந்து காற்றழுத்த மண்டலமாக நிலைப்பெற்று ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 930 கி.மீ தொலைவிலும், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கில் 970 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

காற்றழுத்த மண்டலமானது வடக்குவடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் ஒடிசாஆந்திரா கடற்கரையை நெருங்கும் போது மெதுவாக பலவீனம் அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. 

புயல்சின்னம் சென்னையை நோக்கி வரும் என்றும் தமிழகத்தில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்து இருந்த நிலையில் அது திசைமாறியதால் புயல் ஆபத்து நீங்கியது. 

என்றாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எண்ணூர், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு 2 நாட்ளுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு மழை பாதிப்பு எதுவும் இல்லை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story