சிறிய ஊறுகாய் பொட்டலங்களுக்கு வரியை ரத்துசெய்ய வேண்டும் மத்திய நிதி மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


சிறிய ஊறுகாய் பொட்டலங்களுக்கு வரியை ரத்துசெய்ய வேண்டும் மத்திய நிதி மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 8 Dec 2017 3:45 AM IST (Updated: 8 Dec 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

சிறிய ஊறுகாய் பொட்டலங்களுக்கு வரியை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய நிதி மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

சிறிய ஊறுகாய் பொட்டலங்களுக்கு வரியை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய நிதி மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காத கிராமப்புற பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பொட்டல ஊறுகாய் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.5 ஆகிய குறைந்த விலைகளில் விற்கப்படும் ஊறுகாய்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தினசரி உணவுப் பழக்கவழக்கத்தில் பயன்படுத்தப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுத் தேவைகளில் இவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் ஏழை மக்களில் 65 சதவீதம் பேர் பயன்படுத்தும் இந்த நுகர்பொருள், தற்போதுள்ள ஜி.எஸ்.டி. திட்டத்தில் 12 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கருணாநிதி தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, ஊறுகாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வாட் திட்டத்தின்கீழ் முழு விலக்களித்து இருந்ததை நினைவுகூர விரும்புகிறேன்.

எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் விதத்திலும், 50 கிராம் எடைக்கும் குறைவான பாக்கெட் ஊறுகாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வரியை முழுமையாக ரத்துசெய்து, ஊறுகாய் தயாரிப்பினை பூஜ்ய சதவீத வரி விகிதத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு பொட்டல ஊறுகாய் உற்பத்தியாளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதாகும்.

எனவே, 50 கிராம் ஊறுகாய் பொட்டல உற்பத்தியை ஜி.எஸ்.டி. வரி விதிப்புத் திட்டத்தின் பூஜ்ய சதவீத வரி விதிப்புப் பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து, ஊறுகாய் நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை பெண்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சிறுதொழில்களின் வெற்றியில்தான் கிராமப்புற வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், மேற்கண்ட கோரிக்கையின் மீது தாங்கள் உடனடி கவனம் செலுத்தி, சிறுதொழில் நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story