கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் சேதங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்


கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் சேதங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:15 AM IST (Updated: 8 Dec 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல்-மழை சேதங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல்-மழை சேதங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆய்வு செய்தார். காணாமல்போன மீனவர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் சேதங்களை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக நெல்லையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். குளச்சலில் மீனவ சங்க நிர்வாகிகள், பங்குப் பேரவை நிர்வாகிகளுடன் புயல் பாதிப்பு பற்றி கேட்டார்.

புயலில் சிக்கி மாயமான குளச்சலை சேர்ந்த ஜான் டேவிட்சன் வீட்டுக்கு கவர்னர் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ‘காணாமல்போன மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் மீனவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து நாகர்கோவில் அருகே தடிக்காரன்கோணம் பகுதியில் புயலில் சேதமடைந்த ரப்பர் மரங்களை கவர்னர் பார்வையிட்டார். சேத விவரங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கடுக்கரை விலக்கு பகுதியில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்த வாழைகளை பார்வையிட்டார்.

சுசீந்திரம் கற்காடு பகுதிக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், தேங்கி நின்ற தண்ணீரால் பாதிப்புக்குள்ளான நெல்வயல்களையும் பார்வையிட்டார். மழை வெள்ளம் வடிவதற்காக சுசீந்திரம் புறவழிச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தையும் பார்த்தார்.

கன்னியாகுமரி சென்ற அவர் விவேகானந்தா கேந்திராவுக்கு சென்றார். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிப்படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் குமரி மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் முன்னிலையில் கவர்னர் ஆலோசனை மேற்கொண்டார். புயலால் ஏற்பட்ட சேதங்களையும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் கவர்னர் மனுக்கள் வாங்கினார். மாலை 5 மணி அளவில் அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார்.

கவர்னர் வருகையையொட்டி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story