காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி நாகர்கோவில்-குளச்சல் சாலையில் மீனவர்கள் சாலைமறியல்


காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி நாகர்கோவில்-குளச்சல் சாலையில்  மீனவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Dec 2017 12:22 PM IST (Updated: 8 Dec 2017 12:22 PM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி நாகர்கோவில்-குளச்சல் சாலையில் 4 ஆயிரம் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்


குமரி மாவட்ட கடலோர கிராமங்களில்  இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஓகி புயலால்  மாயமாகி உள்ளனர். 2 ஆயிரம் மீனவர்கள் கடலில் காணாமல் போய் உள்ளதாக மீனவர் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். இதனால் மீனவர் கிராமங்களில் அழுகுரல் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளது.மேலும் மாயமான மீனவர்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் குதித்துள்ளனர்.

நேற்று குமரி மாவட்டத்தில் மீனவர்கள் நடத்திய பேரணி-சாலை மறியல் மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

இதற்கிடையில் கடலில் மூழ்கி பலியான குமரி மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ-.10 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் மாயமான மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெறும் என்றும் அவர் கூறி உள்ளது மீனவர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி நாகர்கோவில்-குளச்சல் சாலையில் மணவாளகுறிச்சி பகுதியில் 4 ஆயிரம் மீனவர்கள் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர்.

குளச்சல் பேருந்து நிலையத்தை நோக்கி 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்  பேரணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தர கோரி குளச்சல் மண்டலத்தை சேர்ந்த 18 கிராம மீனவர்கள் பேரணி செல்கின்றனர்.

 மாணிக்க மாதா ஆலயத்தில் கூடிய 1000 பேர் குமரியை கேரளாவுடன் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். கறுப்புக்கொடியை ஏந்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story