பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12ம் தேதி வருகை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி


பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12ம் தேதி வருகை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
x
தினத்தந்தி 8 Dec 2017 1:22 PM IST (Updated: 8 Dec 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12-ம் தேதி வருகை தரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந் தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின் மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 72 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, 59 பேர் களத்தில் உள்ளனர். 

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் 12 ஆம் தேதி வருகை தரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12ம் தேதி வருகை தரவுள்ளனர். முதலில் 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் பூத் சிலீப் வழங்கப்படும். தேர்தல் பிரசாரத்தின் போது அனுமதி வாங்கிய நபர்கள், வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, அதிக அளவில் நபர்களோ, வாகனங்களோ வந்தால், பிரசாரம் ரத்து செய்யப்படும்.

விஷால் மனு நிராகரிப்பு விவகாரத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தனித்தனியாக தீபன், சுமதி ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட்டது. அதில் யாரும் மிரட்டவில்லை என்று தெரிவித்தனர், அதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது” என்றார். 

Next Story