இந்து கோவில்கள் பற்றி பேசியது என்ன? திருமாவளவன் அறிக்கை
இந்து கோவில்கள் குறித்து பேசியது என்ன? என்பது குறித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஜமாலியாவில் கடந்த 6–ந்தேதி தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர்.
இது என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன.
அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டி சிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் ராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர்.
இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்டவேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ, அப்படித்தான் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும்.
இதை தான் நான் சுட்டிக்காட்டினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது.
பொய்களின் மூலமாகவும், அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story