மாநில தலைமை தகவல் ஆணையராக ஷீலாபிரியா பதவி ஏற்றார்


மாநில தலைமை தகவல் ஆணையராக ஷீலாபிரியா பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 9 Dec 2017 2:45 AM IST (Updated: 9 Dec 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

மாநில தலைமை தகவல் ஆணையராக ஷீலாபிரியா பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியாவுக்கும், 4 தகவல் ஆணையர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த கே.ராமானுஜத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியா மற்றும் 4 ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.

அவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நேற்று மாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, கே.அன்பழகன், கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநில தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்ற ஷீலாபிரியா 1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். அவர் தமிழக கவர்னர்கள் எம்.சென்னாரெட்டி, எம்.பாத்திமாபீவி, பி.எஸ்.ராமமோகன்ராவ் ஆகியோருக்கும், கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்த கிருஷ்ணகாந்த், சி.ரங்கராஜன் ஆகியோருக்கும் செயலாளராக பணிபுரிந்துள்ளார். 1993 முதல் 2005-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் கவர்னரின் செயலாளராக இருந்தார்.

ஷீலாபிரியா மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் செயலாளராகவும் இருந்தவர். அவர் ஓய்வுபெற்ற பின்னரும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் 5 வருடங்கள்.

Next Story