திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது
திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனர் கோபிநாத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்து கோவில்களை இடித்து விட்டு அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று சென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் பேசியதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில் திருமாவளவனின் தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி பரிசு என்று இந்து முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் கோபிநாத் அறிவித்தது தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இருபிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையிலும், கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய கோபிநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கோபிநாத் மீது, திருமாவளவனை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு கோபிநாத்தை போலீசார் தேடி வந்தனர். கோவை மாவட்டம் காரமடையில் தலைமறைவாக இருந்த கோபிநாத்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கோபிநாத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story