அனைத்து பொருட்களிலும் ஜி.எஸ்.டி. வரியை அச்சிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அனைத்து பொருட்களிலும் ஜி.எஸ்.டி. வரியை அச்சிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சரக்கு மற்றும் சேவைக்கான (ஜி.எஸ்.டி.) வரியில் 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் உள்ள பொருட்களுக்கு ஒரே வரியாக அதாவது 18–ல் இருந்து 12 சதவீதமாக குறைத்தால் ஓரளவுக்கு நுகர்வோர் சிரமத்தில் இருந்து விடுபடுவார்கள். இது சம்பந்தமாக கவுன்சிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு 18 சதவீத வரியுள்ள பொருட்களை 12 சதவீதமுள்ள பொருட்களின் வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும்.
மேலும், அனைத்து பொருட்களின் மீதான வரியை முழுமையாக தெளிவாக நுகர்வோர் புரிந்துகொள்ளும்படி தெளிவாக அச்சிடப்பட்ட பிறகே விற்பனைக்கு வருவதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, விற்பனைக்கு வருவதற்கு முன்பே அனைத்து பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.யானது மக்களுக்கு ஏற்புடையதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவே, சரக்கு மற்றும் சேவைக்கான வரியான ஜி.எஸ்.டி.யை பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், சிறு–குறு வியாபாரிகள், வணிகர்கள் போன்றோரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story