போக்குவரத்து தொழிலாளர்கள் 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:00 AM IST (Updated: 10 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 14-ந் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. மணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை முழுமையாக ஈடுகட்டாமல் அரசு போக்குவரத்து கழகங்களை மிக மோசமான நிலைமைக்கு உள்ளாக்கி வருகிறது. 70 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் காலாவதியாகி இயங்கிக்கொண்டிருக்கின்றன.

போக்குவரத்து ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சேமிப்பு பணம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்கள் உள்ளிட்ட ரூ.7 ஆயிரம் கோடியை சட்டவிரோதமாக பயன்படுத்திவிட்டனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு மற்ற துறை ஊழியர்களைவிட குறைவான ஊதியம் வழங்குவது, சட்டபூர்வமான உரிமைகளை மறுப்பது என ஊழியர்கள் கடும் இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை வழங்குவதுடன், நியாயமான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு ஜனநாயகரீதியான போராட்டங்களையும் தொழிற்சங்கங்கள் நடத்தின. ஆனால் அரசிடமிருந்து நியாயமான முடிவு வராத காரணத்தால் கடந்த மே 15, 16 தேதிகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே போராட்டத்தை தொடர தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வரும் 13-ந் தேதி பேருந்து நிலையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கமும், 14-ந் தேதி காலை 10 மணி முதல் அனைத்து மண்டல தலைமையகங்களிலும் தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும். 15-ந் தேதி மாலைக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும். அரசு முடிவெடுக்காவிட்டால் 15-ந் தேதி மாலை அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக அனைத்து சங்கம் கூடி அறிவிக்கும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவை கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story