குமரி மீனவர்கள் உள்பட 27 பேர் தேங்காப்பட்டணத்தில் பத்திரமாக கரை திரும்பினர் உருக்கமான பேட்டி


குமரி மீனவர்கள் உள்பட 27 பேர் தேங்காப்பட்டணத்தில் பத்திரமாக கரை திரும்பினர் உருக்கமான பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2017 2:30 AM IST (Updated: 10 Dec 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

புயலில் சிக்கி மாயமான 27 மீனவர்கள் நேற்று தேங்காப்பட்டணத்திற்கு பத்திரமாக கரை திரும்பினர்.

களியக்காவிளை,

ஒகி புயலால் ஆழ்கடலில் பரிதவித்த குமரி மீனவர்கள் உள்பட 27 பேர் தேங்காப்பட்டணத்திற்கு பத்திரமாக கரை திரும்பினர்.

ஒகி புயலால் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் புயலில் சிக்கி ஆழ்கடலில் தவித்த 27 மீனவர்கள் நேற்று தேங்காப்பட்டணத்திற்கு பத்திரமாக கரை திரும்பினர். இதுகுறித்த விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ராயப்பன், ஆண்டனி, ஜெர்சன், ஜார்சன், ஜாண் போஸ்கோ, கிர்பின், ஜெபராஜ், பிரிட்டோ ஆகியோரும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்பட 27 மீனவர்கள் கடந்த மாதம் கேரள மாநிலத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கடந்த 30-ந் தேதி ஒகி புயல் வீசியது. இதில் சிக்கி ஆழ்கடலிலேயே பரிதவித்த அவர்கள் நேற்று தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் பத்திரமாக கரை திரும்பினர்.

மீனவர்கள் கரை சேர்ந்த விவரம் அறிந்ததும் உறவினர்கள் தேங்காப்பட்டணத்தில் குவிந்தனர். கரை சேர்ந்த மீனவர்களை கண்ணீர் மல்க அழைத்து சென்றனர்.

கரை சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து கூறியதாவது:-

புயலுக்கு முன்பு கேரள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தோம். 30-ந் தேதி ஒகி புயலில் சிக்கி பரிதவித்தோம். இதில் எங்களின் படகு மராட்டிய மாநிலம் ரத்தினகிரி அருகே இழுத்துச் செல்லப்பட்டது. துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அங்குள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதனால் கடலுக்குள்ளேயே உணவின்றி தவித்தபடி இருந்தோம். படகில் டீசல் தீர்ந்ததால் கரைக்கு திரும்ப முடியவில்லை. இதற்கிடையே கடல் காற்று எங்களை கோவா கடல் பகுதிக்கு இழுத்துச் சென்றது. அப்போது அந்த வழியாக சில மீனவர்கள் படகுகளில் சென்றனர். அவர்களிடம் எங்களின் நிலையை கூறி உதவி கேட்டோம். அவர்களும் எங்கள் மீது பரிவு கொண்டு டீசல் கொடுத்து உதவினர். இதையடுத்து கரை வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story