போலீசில் தஷ்வந்த் பரபரப்பு வாக்குமூலம்


போலீசில் தஷ்வந்த் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

தாயாரை கொன்ற பிறகு தந்தையையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன் என்று போலீசில் தஷ்வந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் அதே பகுதியில் வசித்து வந்த தஷ்வந்த் (வயது 24) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் சரளாவை கொன்று அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையையும் கொள்ளையடித்துவிட்டு மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று தஷ்வந்தை கைது செய்தனர். அப்போது தமிழக போலீசாரின் பிடியில் இருந்து கைவிலங்குடன் அவர் தப்பி ஓடினார். இதையடுத்து மும்பை போலீசாரின் உதவியுடன் நேற்று முன்தினம் தஷ்வந்தை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீண்டும் தப்பி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் கை, கால்களில் சங்கிலியால் கட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை தமிழக போலீசார் சிறையில் அடைக்க மும்பை கோர்ட்டு 3 நாள் அவகாசம் அளித்தது.

இதைத்தொடர்ந்து தஷ்வந்த் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார். அவரை குன்றத்தூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் தஷ்வந்த் அளித்ததாக கூறப்படும் பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

சிறுமியை கற்பழித்து எரித்துக்கொன்ற வழக்கில் சிறையில் இருந்த என்னை சொத்துகளை விற்று பெற்றோர் ஜாமீனில் எடுத்தனர். ஆனால் இதில் எனது தாயார் சரளாவுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

வெளியே வந்த பின்னர் என்னிடம் பெற்றோர் சரியாக பேசுவதில்லை. எப்போதும் திட்டிக்கொண்டேதான் இருந்தனர். சாப்பாடும் கொடுக்க மாட்டார்கள். பசி எடுத்தால் தேவைப்படும்போது நானே சாப்பாடு போட்டு சாப்பிடும் நிலை இருந்தது. மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்ட எனது தாய் அடிக்கடி என்னிடம் அந்த குழந்தையை கொன்று விட்டாயே பாவி, நீயெல்லாம் மனிதனா? என்று திட்டுவார்.

வீட்டில் உள்ளவர்கள் திட்டியதால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். எனவே அதை மறக்க சென்னை, புனே, பெங்களூரு, மும்பை நகரங்களில் உள்ள ரேஸ்கோர்சில் சென்று குதிரை பந்தயத்தில் ஈடுபட்டேன். இதற்காக எனக்கு அதிக பணம் தேவைப்பட்டது. அங்கு செல்லும் போது அழகிகளுடனும் உல்லாசமாக இருந்து வந்தேன். எனவே எனக்கு வேலைக்கு செல்லும் எண்ணம் ஏதும் ஏற்படவில்லை.

பணத்தேவை அதிகரித்ததால் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டேன். நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

சொத்தை விற்று லட்சக்கணக்கில் செலவு செய்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தால் வேலைக்கு ஏதும் செல்லாமல் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறாயே? என்றனர்.

இதனால் பெற்றோர் மீது கோபம் ஏற்பட்டது. இருவரையும் தீர்த்துக்கட்டி விட்டு வீட்டில் உள்ள நகை, பணத்தை எல்லாம் எடுத்து சென்று விடலாம் என முடிவு செய்து இருந்தேன்.

சம்பவத்தன்று காலையில் தந்தை வேலைக்கு சென்றதால் தாயார் சரளா மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் செலவுக்கு பணம் கேட்டபோது கொடுக்க மறுத்தார். மேலும் வேலைக்கு செல்லுமாறு திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து தலையின் மீது ஓங்கி அடித்தேன் இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து இறந்து போனார். பின் அவர் மீது துணியை போட்டு மூடிவிட்டு சிறிது நேரம் மற்றொரு அறையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.

கோபத்தில் இருந்த நான், வேலை முடிந்து தந்தை சேகர் வீட்டிற்கு வந்ததும் அவரையும் தீர்த்து கட்டிவிட்டு சென்று விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் யாராவது வந்து விட்டால் மாட்டிக்கொள்வோம் என கருதி அந்த திட்டத்தை கைவிட்டேன்.

பின்னர் தாயார் அணிந்திருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச்சென்றேன். ஜெயிலில் இருந்தபோது நண்பர்களாக பழகிய சிட்லபாக்கத்தை சேர்ந்த டேவிட், ஜேம்ஸ் ஆகியோருடன் சென்று வழக்கு செலவுக்காக நகையை விற்றுத்தருமாறு செங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் நகையுடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் டேவிட் எனக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தான். அந்த பணத்துடன் எனது தம்பி ரஞ்சித்குமாரின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு முதலில் பெங்களூருவுக்கு சொகுசு பஸ்சில் சென்றேன். பின்னர் அங்கிருந்து பஸ் மூலமே மும்பைக்கு சென்று நாள் ஒன்றுக்கு ரூ.500 வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கினேன்.

ஏற்கனவே அங்கு பழக்கமாகி இருந்த விபசார அழகியுடன் தங்கி ரேஸ்கோர்சில் பந்தயம் கட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேன். அப்போது தனிப்படை போலீசார் என்னை கைது செய்தனர். அப்போது முதல் எப்படி தப்பிப்பது என்று சந்தர்ப்பம் தேடினேன். அதற்காக போலீசாரிடம் நட்பாக பழகினேன்.

சென்னைக்கு கொண்டு செல்வதற்காக விமான நிலையம் அழைத்து வரும்போது சாப்பிடுவதற்காக எனது ஒரு கையில் இருந்த கைவிலங்கை போலீசார் கழற்றிவிட்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த நான் ஓட்டலில் இருந்து தப்பி ஓடினேன்.

என்னை கைது செய்த போலீசாருக்கு நான் தங்கியிருந்த அறை முகவரி தெரியாததால் அவர்கள் அங்கு வரவில்லை. இதைப் பயன்படுத்தி அறையில் இருந்த உடையை மாற்றிவிட்டு பணத்தை எடுத்து சென்று முதலில் தலை முடியை வெட்டி தாடியை மழித்து எனது முகத்தோற்றத்தை மாற்றினேன். மேலும் கைவிலங்கை கழற்றும் முயற்சியில் ஒரு ஆக்சா பிளேடை வாங்கி அறுக்க ஆரம்பித்தேன். ஆனால் கைவிலங்கு கட் ஆகாததால் கையில் காயம் அடைந்தவாறு கர்ச்சீப்பை கட்டிக்கொண்டேன்.

பின்னர் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிடும்போது வாட்ஸ்அப்பில் பரவிய படத்தை வைத்து யாரோ போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அதை வைத்து போலீசார் மீண்டும் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் தஷ்வந்த் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குன்றத்தூர் போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஷ்வந்தை வருகிற 12-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று மும்பை கோர்ட்டு எங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து இருந்தது.

ஆனால் தற்போது இந்த கொலை சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் தஷ்வந்த் கூறி விட்டார். மேலும் அவன் கொலை செய்து விட்டு தப்பி ஓட பயன்படுத்திய ஸ்கூட்டர் கோயம்பேட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாயாரை கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நகையை எடுத்து சென்ற மணிகண்டனை பிடிக்க ராமநாத புரத்திற்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.

“சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் மீது 220 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதற்கான விசாரணையும் விரைவாக நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இந்த மாதம் இறுதியில் முடிவடையும் பட்சத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” எனவும் போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைக்காக தஷ்வந்த் வைக்கப்பட்டிருந்த குன்றத்தூர் போலீஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி இருந்ததால் அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்தும் வந்தனர்.

இந்த நிலையில் குன்றத்தூர் போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் தஷ்வந்தை, செங்கல்பட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) சச்சிதானந்தம் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை மாஜிஸ்திரேட்டு வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story