மானிய விலையில் ஸ்கூட்டி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


மானிய விலையில் ஸ்கூட்டி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2017 4:00 AM IST (Updated: 11 Dec 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாள் முதல் இளம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நேற்று பிரசாரம் செய்தனர். கொருக்குப்பேட்டை தர்மராஜா தெருவில் உள்ள சுந்தரவினாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினர்.

திறந்த ஜீப்பில் நின்றப்படி ஏகப்பன் தெரு, மண்ணப்பன் தெரு, இளையமுதலி தெரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். அப்போது அவர்கள் உடன் வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு உள்பட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் விட்டுச்சென்ற பணிகள் தொடர்ந்திட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் வீடுகள் இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். படித்த இளம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஜெயலலிதா பிறந்த நாள் (பிப்ரவரி 24-ந் தேதி) முதல் ரூ.20 ஆயிரம் மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கப்படும். இதற்கு படித்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தொகுதியில் அதை செய்வோம், இதை செய்வோம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற பார்க்கிறார். நான் தொண்டனாக இருந்து தலைவனாக வந்திருக்கிறேன். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவைத்தலைவர் மதுசூதனனும் சாதாரண தொண்டனாக இருந்து இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். எனவே ஏழை-எளிய மக்களின் இன்பம், துன்பம் எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “ஏழை-எளிய மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய சிறப்பான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் ஜெயலலிதா நிறைவேற்றி தந்தார். அந்தவகையில் 50 சதவீதம் மானிய விலையில் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளன்று தொடங்க இருக்கிறது” என்றார்.

Next Story