கடின உழைப்பில் சேமித்த பணத்தை மக்கள் தியாகம் செய்ய முடியாது அருண்ஜெட்லிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


கடின உழைப்பில் சேமித்த பணத்தை மக்கள் தியாகம் செய்ய முடியாது அருண்ஜெட்லிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 12 Dec 2017 3:15 AM IST (Updated: 12 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

தவறான கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வங்கிகளை காப்பாற்ற கடின உழைப்பில் சேமித்த பணத்தை மக்கள் தியாகம் செய்ய முடியாது என அருண்ஜெட்லிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், நிதித் தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா குறித்து எழுதிய கடிதத்தை, தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் நேரடியாக வழங்கினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா’ வங்கிகளின் அடிப்படை கூறுகளை மாற்றி விடும் என்று நான் அஞ்சுகிறேன். வாடிக்கையாளர்கள் நலன் காப்பது வங்கிகளின் தலையாய கடமை என்பது நீர்த்துப்போக வைக்கப்பட்டு, வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான உறவில் சரிசெய்ய முடியாத அளவுக்கு விரிசலை ஏற்படுத்தி விடும் என்று கருதுகிறேன்.

வங்கிகளை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றவும், “தீர்ப்பாய கழகம்” அமைப்பதும், அந்த ஆணையத்திற்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிப்பதும் வங்கிகள் மீதான “சந்தை நம்பிக்கையை” உற்பத்தி செய்யும் நோக்கமாக இருக்கலாம். ஆனால் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தட்டிப்பறித்துவிடும் ஆபத்து நிறைந்தது.

இந்த வரைவு மசோதாவை மக்கள்விரோத மசோதாவாகவே தி.மு.க. கருதுகிறது.

ஆகவே தாங்கள் இந்த மசோதாவை மீண்டும் ஒருமுறை திறந்த மனதுடன் பரிசீலனை செய்து, வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு மறு வரைவு தயாரிக்க வேண்டும் எனவும், மசோதாவை முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்த மசோதாவாக ஆக்குவதற்கு தேவையான மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கிகள் மேற்கொள்ளும் தவறான கடன் வழங்கும் நடவடிக்கைகளால் அவை நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ள நேரிடும் போது, அதை சமாளிக்க வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துக் கொள்ளும் போக்கை தடுக்க வேண்டும் என்றும், கடின உழைப்பில் சேமித்த மக்களின் பணத்தை தவறான முடிவுகளை எடுக்கும் வங்கிகளை காப்பாற்றுவதற்காக தியாகம் செய்ய இயலாது என்றும் வலியுறுத்தி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story