வெற்றி பெற்றால் ஸ்கூட்டி வழங்குவதாக அ.தி.மு.க. எம்.பி. டோக்கன் வழங்குகிறார் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு


வெற்றி பெற்றால் ஸ்கூட்டி வழங்குவதாக அ.தி.மு.க. எம்.பி. டோக்கன் வழங்குகிறார் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Dec 2017 4:45 AM IST (Updated: 12 Dec 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில், வெற்றி பெற்றால் ஸ்கூட்டி வழங்குவதாக அ.தி.மு.க. எம்.பி. டோக்கன் வழங்குவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசினார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

கூட்டத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த காலங்களில் நமக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட காயத்தில் இருந்து வெளிவந்த ரத்தத்தை துடைத்துவிட்டு, நாம் இணைந்தது தமிழ்நாட்டை காப்பாற்ற இணைந்திருக்கிறோம். தமிழகத்திற்காக போடப்பட்டுள்ள மேடை இது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து காப்பாற்ற நாம் ஒன்றாக இங்கே அமர்ந்திருக்கிறோம்.

இது ஒரு தொடக்கம். இது மாற்று நிலையை தமிழகத்திற்கு உருவாக்கித்தருவதற்கு ஆர்.கே.நகர் தொகுதியில் நமது அணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஆக, இந்த தொடக்கம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அணி தொடர வேண்டும். நான் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இது தொடரும் தொடரும் என்று ஆயிரம் முறை எடுத்துச்சொல்கிறேன்.

ஜெயலலிதா மரணத்துக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். அவரால் லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர் களை அழைத்து விசாரிக்க முடியுமா?, பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை அழைத்து விசாரிக்க முடியுமா?, முடியவே முடியாது. எனவே, இது கண்துடைப்பு நாடகம் என்று நாங்கள் கூறுகிறோம்.

பொதுவாக ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல் வந்தது ஆர்.கே.நகர் தொகுதிக்குத்தான்.

இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது. இரட்டை இலை கிடைத்ததை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இதே இரட்டை இலை சின்னத்தில் நின்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நாங்கள் தோற்கடித்து இருக்கிறோம். அதனால், இரட்டை இலை இவர்களுக்கு சென்றதால், எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கவலை, நாடு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறதே. அதை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை தான்.

நேற்று ஒரு தகவல் கிடைத்தது. அ.தி.மு.க. எம்.பி. வெங்கடேஷ்பாபு, வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுப்பதாக ஒரு செய்தி. தாய்மார்களிடம் ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரம் என் கையில் உள்ளது. ஸ்கூட்டி வேண்டும் என்றால் அந்த விண்ணப்பத்தை நிரப்பி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்கூட்டி வழங்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொன்னார். முதலில், பெயரளவில் கொஞ்சம் கொடுத்தனர். பிறகு, அந்த திட்டத்திற்கு சல்லிக்காசுகூட ஒதுக்கவில்லை. அப்படி இருக்கும்போது வாக்காளர்களை ஏமாற்ற இந்த விண்ணப்பம் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. இதன் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

எனது பொது வாழ்க்கையில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகும். ஓராயிரம் உணர்ச்சி அலைகள் என் இதயத்தில் ஒலிக்கும் நாளாக அமைந்துள்ளது. தி.மு.க. என்னை வார்ப்பித்தது. இந்த இயக்கத்தை தகர்க்கலாம், தி.மு.க.வை தாக்கலாம் என்று தி.மு.க.வின் பகைவர்களும், புதிய பகைவர்களும் நெருங்கினாலும், அதை தடுக்கும் வேலாகவும் இருப்பேன் என்று அன்று சொன்னதை இன்றும் அதே உணர்ச்சியோடு சொல்லி உங்கள் முன் நிற்கிறேன்.

திராவிட இயக்கத்தின் ஈட்டி முனையாக உள்ள தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. மதவாத சக்திகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இன்றைக்கு நடப்பது மக்கள் ஆட்சியா? கவர்னர் ஆட்சியா? இந்த கேள்வியே இங்கே பலரும் எழுப்பினார்கள். ஆட்சியை நடத்துவது பழனிசாமியா? கவர்னர் பன்வாரிலால் புரோகித்தா? அவர் கோவை செல்கிறார். கலெக்டருக்கு உத்தரவு போடுகிறார். அதேபோல் நெல்லை செல்கிறார். தூய்மையான நிர்வாகத்தை தருவோம் என்கிறார்.

நீங்கள் யார் இதை சொல்வது? இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். மாநில உரிமைகளுக்கு விடப்பட்ட சவால். இந்த தமிழகத்தை காக்க வேண்டும் என்றால் உதயசூரியன் வெற்றி பெற வேண்டும். ஆர்.கே.நகரில் வீடு வீடாக, தெரு, தெருவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். எப்போது பொது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமரும். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

சு.திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசும்போது, ‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி முடிவாகி விட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆர்.கே.நகர் தேர்தல் அஸ்திவாரமாக அமைந்துள்ளது’ என்றார்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, ‘இந்த தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யக் கூடிய மன உணர்வு கொண்ட தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை வெற்றி பெற வேண்டும். மற்றவர்களை ‘டெபாசிட்’ இழக்க செய்ய வேண்டும்’ என்றார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடங்கிய அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே உண்மையான அரசாக, மாநில, கல்வி உரிமையை, மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கூடிய அரசு அமைவதற்கு மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும். அதற்கான களமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைந்துள்ளது’ என்றார்.

Next Story