அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.
சென்னை
சென்னை கொளத்தூரில் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், கொள்ளைக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களே காரணம் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் நாதுராம், கணேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையில் ஒரு தனிப்படை ராஜஸ்தான் சென்றது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் நெருங்கிய நிலையில் மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி திடீரென சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இன்னொரு காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த தமிழக போலீசார் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நகைக்கொள்ளையர்களே செய்திருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.
தனது கணவர் மரணம் குறித்து மனைவி கூறியதாவது:-
மதுரவாயல் காவல் ஆய்வாளராக கடந்த மாதம் தான் பொறுப்பேற்றார். கொள்ளையர்களை பிடிக்க வெள்ளிக்கிழமை இரவு ராஜஸ்தான் புறப்பட்டார்.
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார்.
Related Tags :
Next Story