கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் எனறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கின் இறுதி முடிவு எடுக்கும் வரை ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவாதத்தை மீறி சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியதாக விஷால் மீது ராதாரவி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 19–ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.