‘அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2017 4:45 AM IST (Updated: 15 Dec 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது என்று தேர்தல் பிரசாரத்தில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கொருக்குப்பேட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுடன் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன், வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் சென்றனர்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ‘டெபாசிட்’ கூட வாங்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்றைய தினம் பிரசார கூட்டத்துக்கு நானும், ஓ.பன்னீர்செல்வமும் நடந்து வரவில்லை. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்திருக்கிறோம்.

இங்கு எழுப்பப்படுகிற வெற்றி முழக்கம் மு.க.ஸ்டாலின் காதுக்கு நிச்சயம் கேட்கும். தேர்தல் முடிவு வரட்டும். ‘டெபாசிட்’ இழக்கப் போவது யார்? என்பது தெரியும். நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. ஜெயலலிதா வழியில் மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்திருக்கிறோம்.

இன்னொருபுறம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிற நோக்கில் குக்கர் சின்னத்துடன் ஒருவர் களம் இறங்கி இருக்கிறார். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கி, ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் இன்றைக்கு கட்சியையே ஒழிக்க நினைக்கிறார். தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு எல்லோரும் சூழ்ச்சி செய்யும் நோக்கில், முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘பிரசாரத்தில் நல்லவர்கள் போல பல கட்சிகள் நாடகம் ஆடி வருகின்றன. தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றன. இப்போது டி.டி.வி.தினகரன் புத்தர் போல நாடகம் ஆடுகிறார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வாக்குகளை ஓரளவு பிரித்து காட்டுகிறேன் என்று டி.டி.வி.தினகரன், மு.க.ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறார். ஆனால் அது நடக்காது. மு.க.ஸ்டாலின் இப்போது புது வே‌ஷம் போட்டு தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார். அவரை பற்றி யாரும் கவலைபட வேண்டாம்.’ என்றார்.


Next Story