கடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது கவர்னர் பன்வாரிலால் பேட்டி


கடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது  கவர்னர்  பன்வாரிலால் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2017 2:59 PM IST (Updated: 15 Dec 2017 2:58 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆய்வுக்கு பின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி அளித்தார் அப்போது கடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறினார்.

கடலூர், 

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட் டத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேற்று மாலை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்ள   வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விருத்தாசலம் வந்தார். ரெயிலில் பயணிகளோடு பயணியாக எளிமையாக வந்தார்.

பின்னர் விருத்தாசலத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தக்கிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இரவு 7 மணிக்கு அங்கி ருந்து கார் மூலம் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டார். இரவு 8 மணிக்கு கடலூர் சுற்றுலா மாளிகை வந்தடைந்தார்.

கடலூர் பஸ் நிலை யத்தை கவர்னர் ஆய்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்பட்டது. ஆங்காங்கே கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
அதேபோல் அரசு ஆஸ்பத்திரி வளாகமும் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டது. பாரதி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவும் சீரமைக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு திடீரென்று கார் மூலம் கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கார் நகருக்கு சென்றார்.

அவருடன் கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.  வண்டிப் பாளையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர் துப்புரவு  பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளில் ஈடுபட்டார்.

அங்கு ஆய்வு பணியை முடித்து விட்டு 10.45 மணிக்கு கவர்னர் மீண்டும் காரில் ரெயில்வே பாலம், உழவர் சந்தை, அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.

அதன் பின்னர் கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் பிரசாந்த், திட்ட அலுவலர் ஆனந்த்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, உதவி கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பின் கவர்னர்  பன்வாரிலால் புரோஹித் பேட்டி அளித்தார் அப்போது  கடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது  என கூறினார்.

Next Story