கன்னியாகுமரி:‘அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் பெரும் பாதிப்பு’
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் பெரும் பாதிப்பு’ ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் மீனவ பிரதிநிதி குற்றச்சாட்டு.
சென்னை,
ஹலோ எப்.எம்.106.4–ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொகுப்பாளர் ராஜசேகருடன் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய மீனவர் அந்தோணி பேசுகையில், தங்களுக்கு புயல் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தது. இதனால் உடனடியாக கரைக்கு திரும்ப முடியவில்லை என்றார்.
கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பேசுகையில், ‘ஒகி’ புயல் பாதிப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை. நாம் தொலைதொடர்பு விஷயங்களில் நாம் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும், வரும் காலங்களிலாவது மனித தவறுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின் பேசுகையில், புயல் பாதிப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனம் காரணமாகத்தான் பலி எண்ணிக்கை அதிகரித்தது. காணாமல் போனதாக கூறப்படும் மீனவர்களின் எண்ணிக்கையில் மத்திய–மாநில அரசுகள் இடையே வேறுபாடுகள் இருப்பதாகவும், உண்மையான நிலவரம் 28–ந்தேதிக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என்றார்.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை நேரடியாக மீனவர்களுக்கு தெரிவிப்பதில்லை. அரசு துறைகளுக்கு தான் தகவல் தெரிவிக்கப்படும். ‘ஒகி’ புயல் விஷயத்தில் குறுகிய கால அவகாசமே இருந்ததாகவும், பொதுவாக புயல் சின்னம் குறித்து தங்களுக்கு 2 நாட்களுக்கு முன்னர்தான் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.