மத்திய அரசின் மீது முதல் அமைச்சர் அச்சம்; அதிகாரத்தினை மீறுகிறார் ஆளுநர்: டுவிட்டரில் ப. சிதம்பரம் கருத்து


மத்திய அரசின் மீது முதல் அமைச்சர் அச்சம்; அதிகாரத்தினை மீறுகிறார் ஆளுநர்:  டுவிட்டரில் ப. சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 17 Dec 2017 9:12 AM IST (Updated: 17 Dec 2017 9:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மீது முதல் அமைச்சர் கொண்டுள்ள அச்சத்தினால் தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தினை மீறுகிறார் என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.  இதற்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன.  எனினும், அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைமையில் இருப்பவர் கவர்னர் தான்.  மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.

அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது.  அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழக ஆளுநரின் அறிக்கை வேடிக்கையாக இருக்கிறது.

அரசு அதிகாரத்தில் ஆளுநர் பதவி என்பது பெயரளவில் மட்டுமே.  உண்மையான தலைமை அதிகாரம் முதல் அமைச்சரிடமே உள்ளது.  அவர் மத்திய அரசின் மீது கொண்டுள்ள அச்சத்தினால் ஆளுநர் தனது அதிகாரத்தினை மீறி செயல்படுகிறார்.

தமிழக முதல் அமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தின்படி, ஆளுநரின் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கும்படி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story