தி.மு.க.– பா.ஜ.க. சரமாரி புகார் ஆதாரங்கள், தேர்தல் ரத்து ஆகுமா?


தி.மு.க.– பா.ஜ.க. சரமாரி புகார் ஆதாரங்கள், தேர்தல் ரத்து ஆகுமா?
x
தினத்தந்தி 18 Dec 2017 4:15 AM IST (Updated: 18 Dec 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் சரமாரி புகார் அளித்தன. ஆதாரங்களும் வழங்கப்பட்டதால் தேர்தல் ரத்து ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்குவதால் தொகுதியில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, மற்றொரு புறம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் அங்கு மோதல் சம்பவமே நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் சார்பில் போலீசாரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் மாறி மாறி புகார்கள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரியான விக்ரம் பாத்ரா, ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக சென்னை வந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோரும், அ.தி.மு.க. தரப்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வெங்கடேஷ் பாபு எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.

இதேபோல், பா.ஜ.க. தரப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர் அரசக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், டி.டி.வி.தினகரன் தரப்பில் அவரது ஆதரவாளர் வெற்றிவேலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது நிர்வாகிகளுடன் சிறப்பு தேர்தல் அதிகாரியான விக்ரம் பாத்ராவை தனித்தனியாக சந்தித்து தங்களிடம் உள்ள புகார் மனுக்களை ஆதாரங்களுடன் அளித்தனர். ஒவ்வொரு கட்சியினரையும் சுமார் 10 நிமிடம் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டு தெரிந்துகொண்டார்.

அரசியல் கட்சியினர் தன்னிடம் கொடுத்துள்ள புகார் மனுக்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, தேர்தல் சிறப்பு அதிகாரியான விக்ரம் பாத்ரா அறிக்கை தயாரிக்க உள்ளார். உடனடியாக, அந்த அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்.

இந்த அறிக்கை கிடைத்ததும், அதன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். அந்த முடிவின் அடிப்படையிலேயே ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா? அல்லது மீண்டும் ரத்து செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

சென்னை காசிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தி.மு.க.வினருக்கு வந்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்றனர். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவரை பிடித்தனர். அவர் கையில் வாக்காளர்களின் பெயர் அடங்கிய பட்டியல் இருந்தது.

இதையடுத்து போலீசாருக்கு உடனடியாக தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பணப்பட்டுவாடா செய்ததாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த நபரை வேனில் ஏற்றி காசிமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 37) என்பதும், அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ரூ.40 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.


Next Story