‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று வருகை


‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று வருகை
x
தினத்தந்தி 19 Dec 2017 5:15 AM IST (Updated: 19 Dec 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட வருகிறார்.

சென்னை,

தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட வருகிறார். இதற்கிடையே, தமிழகத்துக்கு ரூ.561 கோடி நிவாரணத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘ஒகி’ புயல் கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பிரதமர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரிடமும் அவர் பேசினார். கடலோர காவல்படை, விமானப்படை, கடற்படை, என்.டி.ஆர்.எப். மற்றும் உள்ளூர் அரசு துறைகளும் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டன.

2017-2018 ஆண்டுக்கான கேரள, தமிழக அரசுகளின் ஒகி புயல் நிவாரணப்பணிகளுக்கு கைகொடுக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு தொகையில் இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில பேரிடர் மீட்பு தொகையில் மத்திய அரசின் பங்கானது கேரளாவுக்கு ரூ.153 கோடியும், தமிழகத்துக்கு ரூ.561 கோடியும் ஆகும்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு யூனியன் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) பார்வையிட வருகிறார். அப்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.

கவரட்டி, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் நிவாரணப்பணிகளை பார்வையிடுவதோடு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story