கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு காணாமல் போன மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு காணாமல் போன மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் தாக்கிய ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பால், நூற்றுக்கணக்கான மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்த சமயத்தில் காணாமல் போயிருக்கிறார்கள். காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து, அரசுத் தரப்பிலும், மீனவர்கள் தரப்பிலும் வித்தியாசம் இருக்கும் நிலையில், இன்னும் 551 மீனவர்கள் மீட்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பார்வையிட வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தற்போது அறிவித்திருக்கும் ரூ.561 கோடி நிவாரணத் தொகைக்கும் கூடுதலாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன். மீனவ சமூகத்தினரின் பெரும்பான்மையினர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், அடுத்த வாரம் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடும் விதமாக காணாமல்போன மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும். அதோடு தகுந்த நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story