காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் சாவு
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது.
தோகைமலை,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து எல்லையோரம் பக்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 ராணுவ வீரர்கள் சிக்கினர்.
அதில், கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பக்கம் நாச்சி களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியும் (வயது 33) ஆவார். அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ முகாமில் இருந்து மூர்த்தியின் மனைவி தமிழரசிக்கு கடந்த 13-ந் தேதி செல்போன் மூலம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
உடல் மீட்பு
மூர்த்தியை உயிருடன் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் தமிழரசி மற்றும் உறவினர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ராணுவ முகாமில் இருந்து தமிழரசியின் செல்போன் எண்ணிற்கு பேசிய அதிகாரி, மூர்த்தி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை இன்று (அதாவது நேற்று) மாலை 5.30 மணிக்கு மீட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் மூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நாளை (அதாவது இன்று) விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை அல்லது திருச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மூர்த்தி கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு சுபிக்சன்(6), மெர்வின்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story