சென்னையில் ஒரு பாலமாவது கட்டி இருக்கிறீர்களா? பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி
7 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஒரு பாலமாவது கட்டி இருக்கிறீர்களா? என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தீவிரமாக இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.
மாரிமுத்து தெரு, பார்த்தசாரதி தெரு, எண்ணூர் நெடுஞ்சாலை, குமரன் நகர் 3-வது தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்றும், ஆட்டோவில் சென்றும் வாக்கு சேகரித்தார். எண்ணூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்ற பஸ்களில் இருந்த பயணிகளிடமும் ஓட்டு கேட்டார். அம்மன் கோவில் தெரு, நேரு நகர் பிரதான சாலை, நாவலர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாக்காளர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
ஆதரவு வழங்க வேண்டும்
தமிழகத்தில் குதிரை பேர ஆட்சியை நடத்திவரும், முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பல அக்கிரமங்கள், அநியாயங்கள், முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்சியால் தமிழகத்துக்கு எந்தவித பயனும் இல்லை. ஒரு திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.
எல்லா துறைகளிலும் கொள்ளையடிக்கின்ற, லஞ்சம் வாங்கி ஊழல் செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி தொடர்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு ஒரு நல்ல பாடம் புகட்டும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் மருதுகணேசுக்கு உங்கள் ஆதரவை வழங்கிட வேண்டும்.
சிங்கார சென்னை
ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரையில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென சொன்னால், இது ஒரு மிகப்பெரிய வி.ஐ.பி. தொகுதி. வி.ஐ.பி. தொகுதி என்றால் முதல்-அமைச்சரை தேர்ந்தெடுத்த தொகுதி. ஆனால் அதற்கான எந்தவித அடையாளமும் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.
நேற்றைக்கு கூட குதிரை பேர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும் என்ன செய்தார் எனக்கேட்டிருக்கிறார்.
நான் சொல்கிறேன், இதே சென்னை மாநகரத்தை சிங் காரச் சென்னையாக மாற்ற வேண்டுமென சொல்லி, நான் மேயராக இருந்த நேரத்தில் அந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட காரணத்தால் தான் மீண்டும் சென்னை மாநகர மேயராக 2-வது முறை என்னை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஒரு பாலமாவது...
போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென்பதற்காக 10 மேம்பாலங்களை கட்டினோம். என்ன செய்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்களே நான் கேட்கிறேன், உங்கள் ஆட்சியில் 7 ஆண்டுகளில் ஒரு பாலமாவது இந்த சென்னை மாநகராட்சியில் கட்டி இருக்கிறீர்களா? அதற்கு துப்பு இல்லை, திராணி இல்லை.
ஆனால் இன்றைக்கு என்னைப் பார்த்து ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் எனச் சொன்னால் நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அதாவது தோல்வி பயத்தில் 6 ஆயிரம் ரூபாய் வாக்குக்கு விலை பேசப்பட்டு இருக்கிறது. 6 ஆயிரம் அல்ல, 60 லட்சமல்ல, 6 கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த ஆர்.கே.நகர் மக்களை நீங்கள் விலைபேச முடியாது.
மேலிடம் யார்?
அப்பல்லோ மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்போதே ஏன் சொல்லவில்லை என்று கேட்டதற்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலிடம் என்றால் என்ன? அன்றைக்கு ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்த இடத்தில், அவரது இலாகாக்களுக்கு பொறுப்பேற்று இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் சொன்னாரா, அல்லது சசிகலா சொன்னாரா? தினகரன் சொன்னாரா? அல்லது இப்போது முதல்-அமைச்சராக உள்ள மத்திய அரசுக்கு எடுபிடியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமி சொன்னாரா?
காத்திருக்க வேண்டும்
ஒன்று மட்டும் உறுதி, ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்கள் அப்போது ஒன்றாக இருந்து கூட்டு சதி செய்த களவாணிகள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் சசிகலா ஆகியோர் தான். அவர் இறந்த பிறகு பதவிக்காக பிரிந்து இருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வந்த பிறகு, இந்த ஆட்சி கவிழ்ந்து தி.மு.க. ஆட்சி வந்ததும் முதல் வேலையாக அவர்கள் யாராக இருந்தாலும் சிறையில் பூட்டி வைப்பது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story