பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள்? லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு, ஐகோர்ட்டு எச்சரிக்கை
பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை.
சென்னை,
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பூபதி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து, அதற்கு முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால், பம்மல் சார் பதிவாளர், பத்திரப்பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தி வருகிறார்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை போல, ஊழல் செய்யும் பொது ஊழியர்களை (அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அரசு ஊழியர்கள்) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதிக ஊழல்
மேலும், பத்திரப்பதிவுத்துறையில் தான் அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது எத்தனை லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் இந்த வழக்கில் தண்டனை பெற்றனர்? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, பத்திரப்பதிவுத்துறைக்கு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பத்திரபதிவுத்துறை ஐ.ஜி. குமரகுருபரன் பதில் மனு தாக்கல் செய்தார்.
ரூ.70 லட்சம் பறிமுதல்
அதில், ‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 77 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரு அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத் தரகர்களையும்,ஊழல் நடவடிக்கைகளையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.
இணையதளம் வசதி
மேலும் அந்த பதில் மனுவில், ‘பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் ஆவண அறைகளில் மூன்றாம் நபர்கள் நுழைவதைத் தடுக்க ஒருங்கிணைந்த இணையதள வசதி கொண்ட ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் திட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் முன்னோடி திட்டமாக 154 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் கணினி மற்றும் ஆவணப்பதிவு அறைகளுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இதன்மூலம் பத்திரப்பதிவு ஆவணங்கள் அனைத்தும் நவீன முறையில் சென்னையில் உள்ள ஆவண பாதுகாப்பு மையத்தில் என்.ஐ.சி. மற்றும் ‘எல்காட்’ உதவியுடன் பாதுகாக்கப்படும். தேவைப்படும் போது அந்த ஆவணங்களை உடனுக்குடன் ஆய்வு செய்ய முடியும்’ என்றும் கூறியிருந்தார்.
நீதிபதி எச்சரிக்கை
இந்த அறிக்கை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் ஏற்கும் விதமாக இல்லை என்று கருத்து கூறினார். பின்னர், ‘கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ. 70 லட்சம் மட்டுமே லஞ்சஒழிப்புத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது ஏற்கும் விதமாக இல்லை. இந்த அறிக்கை முழுமையானதாக தெரியவில்லை. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது பதிவான லஞ்ச வழக்கு உள்ளிட்ட விவரங்களை விரிவான பதில் மனுவாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டியது வரும்’ என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story