ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியானதால் சர்ச்சை தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியானதால் சர்ச்சை எழுந்து உள்ளது.
சென்னை,
காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று (வியாழக் கிழமை) இடைத்தேர்தல் நடைபெறு கிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. மாலை 5 மணிக்குள் வருவோருக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று ஓட்டுப்போடலாம்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்படும். 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்ததால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி நேற்று திடீரென்று வெளியானது. 20 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியை சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் வெளியிட்டார்.
அந்த வீடியோ காட்சியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த வீடியோவை ஒளிபரப்ப தேர்தல் கமிஷன் தடை விதித்தது.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 48 மணி நேரத்துக்குள், ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை வெளியிட்டது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்று கூறினார்.
Related Tags :
Next Story