ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது மு.க.ஸ்டாலின்


ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பகுதியில் உள்ள துறையூர் நாடார் திருமண மண்டபத்தில் 75 போதகர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் 475 கிறிஸ்தவர்களுக்கு உடைகள், கேக், 5 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், 500 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒகி புயல் தாக்குதலின்போது மத்திய அரசோ, மாநில அரசோ உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த விழாவை கன்னியாகுமரி மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடி இருக்க முடியும். பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்து சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்றாரா என்றால் இல்லை.

ஒரு அரங்கத்தில் குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்துக் கொண்டு, அவர்களிடம் கோரிக்கைகளை கேட்பது போல ஒரு நாடகம் நடத்திவிட்டு, தமிழக அரசுடன், முதல்-அமைச்சருடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்.

பிரதமர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 400 கோடி ரூபாய் அளவுக்கு ஒதுக்குவதாக ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. அந்த நிதி நிச்சயம் போதாது. ஏற்கனவே, செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலை, வார்தா புயல் தாக்குதல் ஆகியவற்றுக்கும் நிதி கேட்டிருக்கிறோம்.

ஆனால், அதற்கான நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. அதை உரிமையோடு கேட்கும் ஆட்சியும் இங்கில்லை. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சிக்கு ஒரு எடுபிடி ஆட்சியாக, மண்டியிட்டு சரணாகதி அடைந்துள்ள ஆட்சியாக இது இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சிக்கு முடிவுகட்ட இன்றைக்கே நீங்கள் தயாராக வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 3 தினங்களாக அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, மக்கள் ஆர்வத்தோடும் எழுச்சியோடும் இருந்த காட்சிகளை பார்த்ததன் மூலம், 6,000 மட்டுமல்ல 60,000 ரூபாய் பணம் கொடுத்தாலும், இன்னும் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஆளும் கட்சியை சேர்ந்த அணியும், அதிலிருந்து பிரிந்துள்ள அணியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன் டெபாசிட் கூட வாங்க முடியாது, என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story