தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி மனைவி சுப்பலட்சுமி காலமானார் எடப்பாடி பழனிசாமி இரங்கல்


தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி மனைவி சுப்பலட்சுமி காலமானார் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 22 Dec 2017 2:30 AM IST (Updated: 22 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.

சென்னை,

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தினமலர் பத்திரிகையின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி. இவருடைய மனைவி சுப்பலட்சுமி (வயது 78). இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அதிகாலை 3.21 மணிக்கு சுப்பலட்சுமி காலமானார். அவருடைய உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. சுப்பலட்சுமி, 1939-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி நெல்லை மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்-விசாலாட்சி.

சுப்பலட்சுமியின் மகள்கள் கிருஷ்ணவேணி நடராஜமூர்த்தி, ஷியாமளா ருத்திரகுமார். மகன்கள் டாக்டர் ராமசுப்பு, ஆதிமூலம், மருமகள்கள் புவனா, சுதா மற்றும் 5 பேரன்களும், 2 பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.

சுப்பலட்சுமியின் இறுதிச் சடங்குகள் மதுரை சத்ய சாய் நகரில் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

சுப்பலட்சுமி, தனது கணவர் லட்சுமிபதியின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். சுப்பலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினமலர் குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் துணைவியார் சுப்பலட்சுமி லட்சுமிபதி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். பத்திரிகை உலகின் ஜாம்பவானாக திகழும் தினமலர் வெளியீட்டாளரின் உற்ற துணையாக இருந்த சுப்பலட்சுமி லட்சுமிபதி அவர்களின் மறைவு லட்சுமிபதிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் லட்சுமிபதியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தினமலர் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story