கூட்டுறவு வங்கிகளிலும் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு நகைக்கடன் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
நம் நாட்டில் விவசாயிகள் ரூ.1 லட்சம் வரை பயிர் சாகுபடிசெய்வதற்கு மத்திய அரசு வங்கிகள் 7 சதவீத வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்குகிறது.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நம் நாட்டில் விவசாயிகள் ரூ.1 லட்சம் வரை பயிர் சாகுபடிசெய்வதற்கு மத்திய அரசு வங்கிகள் 7 சதவீத வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்குகிறது. இவ்வாறு வாங்கும் கடனை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இதனால், 4 சதவீதமுள்ள வட்டியில் பயிர்க்கடன் கிடைக்கிறது.
ஆனால், தமிழகத்தில் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் தங்கள் நகைக்கடனை அடமானம் வைத்து பயிர்க்கடன் பெறும்போது அதற்கான வட்டியாக 12 சதவீதம் முதல் 14.5 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இது விவசாயிகளை துன்புறுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே, விவசாயிகளுக்கு மத்திய அரசு வங்கிகள் 7 சதவீத வட்டியில் நகைக்கடன் வழங்கும்போது தமிழக அரசும் அதே சதவீதத்தில் நகைக்கடன் வழங்க வேண்டும்.
முக்கியமாக, தமிழகத்தில் விவசாயத் தொழிலை மேம்படுத்த விவசாயக்கடனை குறைந்த வட்டியில், கட்டுப்பாடுகளை தவிர்த்து, முறையாக தொடர்ந்து வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story