பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட பணிகள் தொடங்கி விட்டன திருநாவுக்கரசர் அறிக்கை


பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட பணிகள் தொடங்கி விட்டன திருநாவுக்கரசர் அறிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2017 1:00 AM IST (Updated: 23 Dec 2017 11:14 PM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்திக்கு ஆதரவாக அரசியல் காற்று வீசுகிறது என்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விட்டன என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2 ஜி அலைக்கற்றை வழங்கியதில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டவர் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய். ஆதாரமற்ற அவதூறாக கருதப்பட்ட இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் வினோத் ராய்.

இதை செய்ததற்காக பா.ஜ.க. ஆட்சியில் வினோத் ராய்க்கு ரயில்வே துறை ஆலோசகராகவும், ஐ.நா. மன்றத்தின் தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சதி திட்டத்திற்கு துணை போனவருக்கு சலுகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இவரது விபரீத கற்பனையில் உருவான அறிக்கையினால் இந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ராகுல்காந்தி பொறுப்பேற்றதற்குப் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி மேல் வெற்றி குவிந்து வருகிறது. தேசியளவில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுகிற முயற்சியில் ராகுல்காந்தி ஈடுபட்டு வருகிறார். ராகுல்காந்தி தலைமைக்கு ஆதரவாக அரசியல் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 16 மாதங்களே உள்ள பா.ஜ.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீது களங்கம் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் மூலம் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு பெற்றுள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரை வாழ்த்துகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் பட்ட துன்பங்களுக்கு இன்று விடிவுகாலம் ஏற்பட்டிருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றாலும், தர்மம் நிலைத்து நிற்கும் என்பதை இன்று இந்நாடு கண்டு வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story