அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 156 பேர் மீது போலீசார் வழக்கு


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 156 பேர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 24 Dec 2017 2:45 AM IST (Updated: 24 Dec 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக 156 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக இருந்தது. இந்த காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வை நடத்தியது.

இந்த தேர்வு முடிவு கடந்த நவம்பர் 7-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக தேர்வர்களிடம் இருந்து தேர்வு வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டது. பின்னர் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் எழுத்துத்தேர்வு முடிவிலும், விடைத்தாள் நகலிலும் மதிப்பெண் வித்தியாசம் காணப்பட்டது. இதன் மூலம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து குறுக்கு வழியை கையாண்ட தேர்வர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் போது திருத்திய டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் என முதற்கட்டமாக 156 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலையில் சிக்கி உள்ளனர்.

அவர்கள் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை திருத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story