ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பான முடிவு டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பான முடிவு டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி
x
தினத்தந்தி 25 Dec 2017 5:45 AM IST (Updated: 24 Dec 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக் கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

பலத்த பாதுகாப்புக்கிடையே விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவில், 76.68 சதவீத வாக்குகள் பதிவாயின.

சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டது. பதிவாகி இருந்த ஒரேயொரு தபால் ஓட்டு தி.மு.க.வுக்கு கிடைத்து இருந்தது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் டி.டி.வி.தினகரனே கூடுதல் வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னணியில் இருந்தார்.

19 சுற்றுகளின் முடிவில் அவர் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு 3-வது இடமே கிடைத்தது. அவருக்கு 24 ஆயிரத்து 651 வாக்குகள் கிடைத்தன.

3,860 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு 4-வது இடமும், 1,417 வாக்குகள் பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 5-வது இடமும் கிடைத்தது.

பாரதீய ஜனதா வேட்பாளரை விட நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது. அதாவது நோட்டாவுக்கு 2,373 ஓட்டுகள் கிடைத்து இருந்தன.

டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருது கணேஷ் (தி.மு.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாரதீய ஜனதா) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்து உள்ளார்.

Next Story