ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 25 Dec 2017 2:45 AM IST (Updated: 25 Dec 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றுள்ளார். டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்):-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கிவிட்டது. எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள தி.மு.க. இந்த நிலைமையையும் எளிதில் எதிர்கொள்ளும்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. (பா.ம.க. இளைஞரணித்தலைவர்):-

டி.டி.வி.தினகரன் தமிழகத்திற்காகவோ, தமிழக மக்களின் நலனுக்காகவோ போராடியவர் அல்ல. எந்த நன்மையும் அவர் தமிழகத்துக்கு செய்துவிடவில்லை. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஊழல் செய்து குவித்து வைத்த ஊழல் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற முடியுமானால் இது எந்த வகையான ஜனநாயகம் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. டி.டி.வி.தினகரனின் வெற்றி தமிழக மக்களுக்கு தோல்வி தான்.

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை தாண்டி பணநாயகம் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புகார் அளித்தும் பயன் இல்லை. இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் மீது மட்டும் அல்ல, பொதுத்தேர்தல் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். எனவே தேர்தல் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் அவசியம்.

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர்):-

டி.டி.வி.தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே காட்டுகிறது. பணம் கொடுத்து வாக்குகளை விலை பேசும் அரசியல்வாதிகளின் அணுகுமுறையும், பணத்தை பெற்றுக்கொண்டு வெற்றியை தேடி தரும் வாக்காளர்களின் அறியாமையும், இந்த சூழ்நிலையை கண்டும், காணாமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் இயலாமையும் மக்களாட்சியின் மகத்துவத்தையே ஏளனத்துக்குரியதாக மாற்றிவிட்டன.

தெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்):-

டி.டி.வி.தினகரனின் ஆளுமை, துணிச்சல் இவற்றோடு சேர்த்து மத்திய அரசை தைரியமாக எதிர்க்கும் போக்கு ஆகியவை மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அடிபணிந்து செல்வது தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

டாக்டர் ந.சேதுராமன் (அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர்):-

பணப்பட்டுவாடாவுக்கு இடையே நடந்த தேர்தல், மக்களின் வறுமையை விலைக்கு வாங்கி பெற்ற வெற்றி. தேர்தல் முடிவால் ஆளும் கட்சிக்கு பிரஷர் கூடியிருக்கிறது. இந்த வெற்றியை பணம் கொடுத்து பெறவில்லை என்று தன் மனசாட்சியை தொட்டு டி.டி.வி.தினகரனால் சொல்ல முடியாது.

Next Story