‘அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார்


‘அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 31 Dec 2017 8:30 PM GMT (Updated: 31 Dec 2017 8:21 PM GMT)

அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

தமிழக அமைச்சர் ஜெயக் குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிக்கு, தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ரஜினியின் பேச்சை திசை திருப்ப வேண்டாம். ரஜினி, அ.தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. பொதுவாக சொன்ன கருத்து. அவர் தி.மு.க.வை கூட சொல்லி இருக்கலாம். அ.தி.மு.க.வை சொல்லி இருந்தால் நாங்கள் பதில் தருவோம். பொதுவாக சொன்ன கருத்துக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

ரஜினி வருகையால் அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது. அரசியலில் குதிக்கப்போவதாகத் தான் சொல்லி இருக்கிறார். அரசியல் என்பது ஒரு கடல். அதில் யார் வந்தாலும் வரவேற்போம்.

அரசியலில் குதித்த பின் என்ன மாதிரி கொள்கைகள், திட்டங்கள் என்பதை பார்த்து தான் விமர்சனம் செய்ய முடியும். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியா? என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும்.

திருமங்கலம் தேர்தலில் மோசமான கலாசாரத்தை தி.மு.க.தான் கொண்டு வந்தது. தி.மு.க. வழியில் ரூ.20 டோக்கன் தந்து தினகரன் ஹவாலா முறையில் ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி அளித்து வெற்றியை தற்காலிகமாக பெற்றிருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் தினகரனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் மு.க.ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் இருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘கடல் வற்றி கருவாடு சாப்பிட கொக்கு நினைத்து செத்தது’ போல் இருக்கிறது.

2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசு நீடிக்கும். அதன்பின்பும் அ.தி.மு.க. அரசை அமைப்போம் என்ற பயணத்தில் நாங்கள் செல்கிறோம். ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி பெற்று உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story