போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 12:08 AM GMT (Updated: 11 Jan 2018 12:08 AM GMT)

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் இன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 7–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், எச்.எம்.எஸ். தமிழக செயல் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ராம.முத்துக்குமார் உள்பட 22 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சிலரை வைத்து மட்டும் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அது துரோக ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு தான் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முழுமையான காரணம் தொழிலாளர் நலத்துறை என்பதால், அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதற்கு பிறகாவது சட்ட விதிகளை அமல்படுத்தாத தொழிலாளர் நலத்துறை உடனடியாக தவறுகளை திருத்திக்கொண்டு, அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்து பேசி இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதையும் நாங்கள் எதிர்கொண்டு தான் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் நீங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது சரிதானா? எப்போது தான் தீர்வு ஏற்படும்? என்ற கேள்விக்கு, ‘‘போக்குவரத்து துறை அமைச்சர் தான் இதற்கு தீர்வு காணவேண்டும். இந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர் தலையிட்டு உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும்’’ என்று சண்முகம் பதில் அளித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய(மத்திய) தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.


Next Story