டி.வி., ஜி.பி.எஸ்., தானியங்கி கழிவறை வசதி:விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்


டி.வி., ஜி.பி.எஸ்., தானியங்கி கழிவறை வசதி:விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்
x
தினத்தந்தி 11 Jan 2018 10:30 PM GMT (Updated: 11 Jan 2018 8:31 PM GMT)

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னை,

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம்.

வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும்.

முதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும்.

இந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. அனுபூதி என்பது இந்தி வார்த்தை ஆகும். இதற்கு ‘புதிய அனுபவம்’ என்பது அர்த்தமாகும். இந்த பெட்டி சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸில் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அனுபூதி பெட்டிகளின் சிறப்பு அம்சம் வருமாறு:-

* அதிக இடவசதி மற்றும் கால் வைக்கும் வசதி உடைய 56 தானியங்கி சொகுசு இருக்கைகள், இருபுறமும் 2 இருக்கைகள் வீதம் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

* இருபுறமும் தானியங்கி கதவுகள்.

* அழகான உள் கட்டமைப்பு.

* தனித்தனியாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதி.

* தானியங்கி கழிவறைகள்.

* எல்.இ.டி. விளக்குகள்.

* தனித்தனியாக படம் மற்றும் பயண வரைபடங்கள் பார்க்க ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.சி.டி. திரை டி.வி.

* ரெயில் பணியாளர்களை அழைக்க அழைப்பு மணி.

* தனித்தனியாக சிற்றுண்டி மேஜை.

* ஜி.பி.எஸ். அடிப்படையில் பயணிகளுக்கு ரெயில் நிறுத்தம் குறித்த தகவல்.

அனுபூதி பெட்டி தயாரிக்கப்போவதாக கடந்த 2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இப்போது அது நிறைவேறி உள்ளது. ஒரு அனுபூதி பெட்டி தயாரிக்க ரூ.2.80 கோடி செலவு ஆகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 10 அனுபூதி பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இதில் 2 பெட்டிகள் தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் பெட்டி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் தன் சேவையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story