கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? தாமதிப்பது பயத்தினால் அல்ல என்கிறார்


கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? தாமதிப்பது பயத்தினால் அல்ல என்கிறார்
x
தினத்தந்தி 11 Jan 2018 10:00 PM GMT (Updated: 11 Jan 2018 8:35 PM GMT)

“அரசியல் கட்சி தொடங்க தாமதிப்பது பயத்தினால் அல்ல” என்று நடிகர் கமல் ஹாசன் கூறினார்.

சென்னை,

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

“முழுநேர அரசியல்வாதியாகப் போகிறேன் என்றதும் திசையெங்கிலும் இருந்து விசாரிப்புகள், விமர்சனங்கள், கேள்விகள். ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி விமர்சனம் வைக்கும் நீங்கள் ஏன் அதில் பங்கெடுக்கவில்லை என்கிறார்கள். அது எப்படி போகும் என்ற வியூகம் உணர பெரிய அரசியல் அறிவு தேவை இல்லை. இன்றைய சூழலில் அது எப்படி தொடங்கி எப்படி முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு விதமான எதிர்பார்த்த விபத்து. அது நிகழப்பார்த்தோம் என்பதுதான் நமக்கான அவமானம். அந்த அவமானத்தை காலாகாலத்துக்கும் தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இதை நான் சொன்னதற்காக ஒரு தனிப்பட்ட மனிதர், தனிப்பட்ட கட்சி கோபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக எல்லோரும் கோபித்துக்கொள்ள வேண்டும். வருத்தப்பட வேண்டும்.

வேண்டுமானால் என்மீது கோபித்துக் கொள்ளுங்கள் வருத்தம் இல்லை. யாராவது நினைவுபடுத்த வேண்டும் இல்லையா. கையை கழுவி விட்டு சாப்பிடுங்கள் என்று சொல்வதை கிண்டலடித்துக்கொண்டு இருந்தால் வியாதி எப்படி குணமாகும். என் விமர்சனத்தை வீம்பு பிடித்தால் எப்படி. நோயை நீங்கள் உணவாக உட்கொண்டபடியிருந்தால் எப்போது குணமாவீர்கள்.

நடந்த குற்றத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் நான் என்னையே அவமானப்படுத்திக் கொள்கிறேன். ஆர்.கே.நகரில் குடியிருந்து டோக்கன் வாங்கியிருந்தால்தான் அசிங்கமா? வெளியில் இருந்து அது நிகழ பார்த்துக்கொண்டு இருந்தேனே. அந்த குற்ற உணர்வு எனக்கும் உண்டே. அதை தடுக்க என்ன செய்தோம்.

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி உங்கள் கருத்தை சொன்னீர்கள். அதற்கு எதிர் கருத்து சொல்லாமல் உங்கள் உருவ பொம்மை எரிப்பு, வழக்கு என்று சென்றனர். அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நற்பணி மன்றத்தாரையும் தலைமையின் அனுமதியின்றி செய்யாதீர்கள் என்கிறீர்கள். ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அனுமதி அளிக்காத இதுவும் சர்வாதிகாரம்தானே” இப்படியும் சொல்கிறார்கள் சிலர்.

இதில் சர்வாதிகாரம் ஒன்றும் இல்லை. அவர்களை கட்டுப்படுத்த வேண்டியது என் கடமை. தேவையின்றி அந்த 500 பேரை சிறையில் அடைத்து விட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் நாம் சாதிக்கப்போவது என்ன? மக்களுக்கு என்ன லாபம்.

ஏகப்பட்ட தயாரிப்புகள்.. சந்திப்புகள்.. ஆலோசனைகள்.. கட்சி தொடங்கும் திட்டம் எப்படி போய்ட்டிருக்கு என்று கேட்கிறார்கள். இப்படி கேட்பது படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே என்ன கதை என்று கேட்பதற்கு சமம். ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி பண்றோம். திரில்லர், காமெடி, சமூக சிந்தனை அதிகம் உள்ள படம். இப்படியெல்லாம் சொல்லலாம். பதில் சொன்னால் முழுக்கதையும் சொல்லி விட்டதாக ஆகிவிடும்.

சொல்வதைப்பற்றி ஒன்றும் இல்லை. இதில் ரகசியமும் இல்லை. பிரகடனத்துக்குத்தான் இத்தனை பிரயத்தனங்களும். சினிமாவில் நாம் எடுத்து முடிப்பதற்குள் வேறொருவர் எடுத்து ரிலீஸ் பண்ணிவிடுவார்களோ என்ற பயம். இங்கேயும் கூட அது நடக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது. சொல்வதை மிக சரியாக சொல்ல வேண்டும். அந்த வேலைகள்தான் நடந்து கொண்டு இருக்கிறது.

இது மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. போட்டிக்காக அவசரப்படுத்த முடியாது. இது வியாபாரமில்லை. முக்கியமான மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டிய கருவி. அதை சரியாக பண்ண வேண்டியது கடமை. அதற்கான எல்லா டெஸ்டிங்கும் நடந்துகொண்டு இருக்கிறது. அறிவார்ந்த கூட்டம், ஆராய்ச்சியை அதிகப்படுத்தி சரியாக கொண்டு வந்து சேர்த்தால்தான் பயன்படக்கூடிய கருவியாக இருக்கும். அதற்காகத்தான் இந்த தாமதம்.

நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அரசியலில் போட்டி பொறாமை வந்து விடும் என்பதற்காக முன்னேறாமலேயே இருக்க முடியுமா? பகையை பெரிதாக்கி வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாக தொடர எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடரவும் இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை.

நான் தாமதப்படுத்துவது சந்தேகத்தினாலோ பயத்தினாலோ அல்ல. சிரத்தையினால்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story