குட்கா நிறுவன பங்குதாரர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்தாரா?


குட்கா நிறுவன பங்குதாரர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்தாரா?
x
தினத்தந்தி 12 Jan 2018 10:45 PM GMT (Updated: 12 Jan 2018 8:40 PM GMT)

குட்கா நிறுவன பங்குதாரர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்தாரா? என்பது குறித்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

குட்கா நிறுவன பங்குதாரர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்தாரா? என்பது குறித்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு தமிழகத்தில் வர்த்தகம் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா நிறுவன பங்குதாரரான மாதவராவிடம் பெறப்பட்ட ரகசிய குறிப்பில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலருக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. எனவே, இந்த ஊழல் சம்பந்தமாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய கலால் துறை, வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய கலால்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், ‘குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்ததன் மூலம் ரூ.55 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்து உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறையின் (புலனாய்வு பிரிவு) முதன்மை இயக்குனர் சுசிபாபு வர்க்கீஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

எம்.டி.எம். குட்கா நிறுவன பங்குதாரரான மாதவராவின் வீட்டில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் எச்.எம்., சி.பி. என்று 2 குறியீடுகள் இருந்தன. அதில் எச்.எம். (ஹெல்த் மினிஸ்டர்) என்பது சுகாதாரத்துறை அமைச்சரையும், சி.பி. (கமிஷனர் ஆப் போலீஸ்) என்பது போலீஸ் கமிஷனரையும் குறிப்பிடுகிறது. எச்.எம். என்ற குறியீடுக்கு நேராக ரூ.56 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது சம்பந்தமாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி அப்போதைய வருமான வரித்துறை இயக்குனர், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி உள்ளார். இதுதவிர குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் மற்றொரு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதங்களை டி.ஜி.பி., முதல்-அமைச்சருக்கு அனுப்பி இருக்கிறார். இந்த 2 கடிதங்களும் கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தில் சசிகலாவின் அறையில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story