ராஜஸ்தான் போலீசாருடனும் துப்பாக்கி சண்டை: கொள்ளையன் நாதுராம் சிக்கியது எப்படி?


ராஜஸ்தான் போலீசாருடனும் துப்பாக்கி சண்டை: கொள்ளையன் நாதுராம் சிக்கியது எப்படி?
x
தினத்தந்தி 15 Jan 2018 11:15 PM GMT (Updated: 15 Jan 2018 8:40 PM GMT)

சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராம் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

சென்னை கொளத்தூரை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் புழல் லட்சுமிபுரத்தில் வைத்துள்ள நகைக்கடையில் கடந்த நவம்பர் மாதம் துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது. கடையின் மேற்கூரையை துளைபோட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மூட்டை கட்டி கொள்ளையர்கள் 2 பேர் எடுத்துச்செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் என்பது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிப்பதற்காக முதலில் சென்ற தனிப்படை போலீசாரால் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினர் சிலரை மட்டும் கைது செய்து சென்னை திரும்பினர்.

இந்தநிலையில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிப்பதற்காக மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்பட 6 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி கொள்ளையர்கள் 2 பேரும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமபுரம் கிராமத்தில் உள்ள செங்கற்சூளையில் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து தனிப்படை போலீசார் சென்றனர். அப்போது கொள்ளை கும்பலுக்கும், தனிப்படை போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி சூடும் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, தலைமறைவாக இருந்த கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகிய 2 பேரையும் ராஜஸ்தான் போலீசார் வலைவீசி தேடினர்.

போலீசார் வலையில் தினேஷ் சவுத்ரி கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி சிக்கினான். விசாரணைக்கு பின்னர் அவன் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டான். முக்கிய குற்றவாளியான நாதுராம் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான். அவனுடைய நடமாட்டத்தை ராஜஸ்தான் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

கடந்த வாரம் ‘நாதுராம் ஜாட்’ என்ற பெயரிலான ‘பேஸ்-புக்’கில்(முகநூல்), கையில் துப்பாக்கியுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டான். அதில் தனது தொழில் கிரிமினல் என்று பதிவிட்டு இருந்தான். இது ராஜஸ்தான் மற்றும் தமிழக போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை சவாலாக ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் மற்றும் சென்னை போலீசார் அவனை பிடிப்பதற்காக வியூகம் அமைத்தனர்.

நாதுராமின் ‘முகநூல்’ மூலம் அவன் பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை ராஜஸ்தான் ‘சைபர் க்ரைம்’ போலீஸ் அதிகாரி கோத்தல் ஆச்சார்யா கண்டுபிடித்தார். அதனடிப்படையில் செல்போன் டவர் மூலம் அவனது நடமாட்டத்தை அங்குலம், அங்குலமாக போலீசார் கண்காணித்து வந்தனர்.

அதில் நாதுராம் ஒரு மாதத்தில் 33 இடங்களை மாற்றி இருப்பதும், உத்தரபிரதேசம், மத்திய பிரேதசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று இருந்ததும் தெரிய வந்தது.

நாதுராமின் செல்போன் டவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியை காட்டியது. அதன்பேரில் அவனை பிடிப்பதற்காக பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

நாதுராம் தனது காரில் கூட்டாளி சுரேஷ் போகுவால் என்பவனுடன் ‘ராஜ்காட்-மாண்டோ’ சாலையில் சென்றிருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவனது காரை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

போலீசார் தன்னை துரத்தி வருவதை அறிந்த நாதுராம் காரை மின்னல் வேகத்தில் ஓட்டினான். போலீசாரும் விடாமல் அதிரடியாக விரட்டி சென்றனர்.

இந்தநிலையில் நாதுராமும், அவனுடைய கூட்டாளி சுரேஷ் பேகுவாலும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசாரும் நாதுராமின் காரின் டயரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதில் அவனது கார் டயர் பஞ்சராகி நின்றது. உடனடியாக காரில் இருந்த நாதுராமும், அவனது கூட்டாளியும் வேகமாக ஓட்டம் பிடித்தனர். போலீசாரும் விரட்டி சென்றனர்.

பாகோத்ரா சுங்கச்சாவடி அருகே நாதுராம், சுரேஷ் பேகுவாலை போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் 2 பேரையும் கைது செய்தனர். இந்த காட்சிகள் சினிமாவில் நடக்கும் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பாக இருந்தது.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராம் தான் சுட்டான் என்று இன்ஸ்பெக்டர் முனிசேகர் புகார் அளித்தார். விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார், இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு தான் பெரியபாண்டியன் உயிரை பலி வாங்கியது என்று தெரிவித்தனர். இதனால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசார் மீதும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பதால், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை அவன் தான் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவனிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரியை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விரைவில் ராஜஸ்தான் சென்று, கொள்ளையர்கள் 2 பேரையும் சென்னை அழைத்து வர உள்ளனர். 

Next Story