1,500 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


1,500 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:11 PM GMT)

1,500 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, வியாசர்பாடியில் உள்ள மூர்த்திங்கர் தெரு திட்டப்பகுதியில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 10 கட்டிட தொகுப்புகளுடன், ஒவ்வொரு குடியிருப்பும் தலா 416 சதுர அடி பரப்பளவில், 112 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-ந் தேதியன்று (நேற்று) காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள சேனியம்மன் கோவில் திட்டப்பகுதியில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், 9 கட்டிட தொகுப்புகளுடன், ஒவ்வொரு குடியிருப்பும் தலா 397 சதுர அடி பரப்பளவில், 38 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 464 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

மதுரை

இதே போல் மதுரை, பூங்கா நகர் திட்டப்பகுதியில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், ஒவ்வொரு குடியிருப்பும் தலா 374 சதுர அடி பரப்பளவில், 5 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 76 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 156 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 1,500 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக் குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story