ஈரானில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்


ஈரானில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 8:53 PM GMT)

ஈரானில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சென்னை துறைமுக சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக வெளிநாட்டில் இருந்து சிகரெட்டுகள் கடத்தி வரப்படுவதாக சென்னை துறைமுக சுங்க ஆணையத்தின் கடத்தல் தடுப்பு சிறப்பு நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்துக்கு, ஈரான் நாட்டில் இருந்து (ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்தில் கண்டெய்னர்கள் லோடு நிரப்பப்பட்டது) சென்னை துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில் 9 கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஜிப்சம் உப்பு இறக்குமதி செய்வதாக கூறப்பட்டிருந்த, அந்த கண்டெய்னர்களில் வெளிநாட்டு சிகரெட்டுகளும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜிப்சம் உப்பு வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளுக்குள் 490 அட்டை பெட்டிகளில் இந்தோனேசியா நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபலமான கம்பெனி சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட 70 லட்சத்து 56 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.

எச்சரிக்கை வாசகம்

சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகரெட்டை இறக்குமதி செய்ய அதிக வரி செலுத்தவேண்டியது இருக்கும். இதனால் சட்டவிரோதமாக அதிக லாபத்துக்காக சிகரெட்டுகளை கடத்துகின்றனர். சிகரெட் பாக்கெட்டுகளில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து நன்கு தெரியும் வகையில் 60 சதவீதம் படம் மூலமான எச்சரிக்கை மற்றும் 25 சதவீத இடத்தில் எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை வாசகங்கள் சட்டப்பூர்வமாக இடம்பெறவேண்டும்.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளில் 50 சதவீத இடத்தில் மட்டுமே ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல உற்பத்தியாளர், பொருட்களின் அளவு, உற்பத்தி செய்யப்பட்ட மாதம் மற்றும் வருடம், சில்லரை விற்பனை விலை ஆகியவை சட்டப்பூர்வமாக சிகரெட் பாக்கெட்டுகளில் குறிப்பிடவேண்டும். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளில் எதிலுமே இதுபற்றி குறிப்பிடப்படவில்லை.

விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள், கிராம்புகளை நசுக்கியும், கிராம்பு எண்ணெய் மற்றும் புகையிலை ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனால் கிராம்புகளை உட்கொள்வது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. இதனால் அதிக இளைஞர்கள் இந்த சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அந்த சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள், படம் கட்டாயமாக்கப்பட்ட 85 சதவீதத்தில் இருந்து குறைவான அளவு இருப்பதால், இந்தியாவில் உற்பத்தி செய்யும் சிகரெட்டுகளை விடவும் இவை பாதுகாப்பான சிகரெட்கள் என்று கருதி ஏராளமானோர் நம்புகின்றனர். கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல் துறைமுக சுங்க தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story