சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா


சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
x
தினத்தந்தி 2 Feb 2018 11:30 PM GMT (Updated: 2 Feb 2018 9:03 PM GMT)

சென்னையில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களையவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 4 கேமராக்கள் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களில் பதிவாகும் வீடியோக்கள் மூலமாக போக்குவரத்து காவல் துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களை அகற்றவும் உதவும். எதிர்காலத்தில் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் காலப்போக்கில் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. கேரளாவில் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே இதுபோன்ற கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story