மாநில செய்திகள்

சென்னை ரெயிலில் கர்ப்பிணியிடம் சில்மிஷம்: சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் கைது + "||" + Chennai train sexual harassment | CBCID Sub-Inspector arrested

சென்னை ரெயிலில் கர்ப்பிணியிடம் சில்மிஷம்: சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் கைது

சென்னை ரெயிலில் கர்ப்பிணியிடம் சில்மிஷம்: சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் கைது
சென்னை ரெயிலில் விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,

விருதுநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 57). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 7 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

பணி நிமித்தமாக சென்னை வந்த இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார். அவரது இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையில் பெண் ஒருவரும் அவருடைய கணவரும் அமர்ந்திருந்தனர்.

சில்மிஷம்

அந்த பெண்ணை கீழ் படுக்கையில் படுக்க வைத்து விட்டு அவரது கணவர் மேல் படுக்கையில் படுத்து இருந்தார். ரெயில் சேலம் அருகே சென்றபோது சந்திரசேகரன், தனியாக படுத்து கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பதறியடித்து எழுந்தார். அருகில் மற்றொருவர் இருப்பதை கண்டதும் அவர் கூச்சலிட்டார்.

அவரது கூக்குரலை கேட்டு அவருடைய கணவரும், மற்ற பயணிகளும் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்தனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தார்.

கைது

ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய கணவரும் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயிலில் வந்த பெண்ணின் கணவர் கோவையில் உள்ள விமானப்படை முகாமில் ஊழியராக வேலை செய்வதும், பாட்னாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது.

கர்ப்பிணி என்றும் பாராமல் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை ஈரோடு ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.