லஞ்சம் வாங்கியதாக கைதான துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி


லஞ்சம் வாங்கியதாக கைதான துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 8 Feb 2018 7:05 AM GMT (Updated: 8 Feb 2018 7:05 AM GMT)

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #BailPlea #BharathiarUniversityVC #Ganapathy

கோவை,
 
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

துணைவேந்தர் கணபதி 2016-ம் ஆண்டு  76 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பினார். இவற்றுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும் ஊழியர்கள், அலுவலர்கள், டிரைவர்கள் என 250 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இவற்றில் பணியிடத்துக்கு தகுந்தாற்போல் லஞ்சம் பெற்றுள்ளனர். 

இதுதவிர கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைகழக அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 120 பேரை பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மொத்தத்தில் ரூ.3 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என தெரிகிறது. இதற்கு கேன்டீன் ஊழியர்,  அலுவலர்கள், பேராசிரியர்கள் என பலரும் இடைத்தரகர்களாக செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் கணபதி மீது அடுக்கடுக்கான புகார்கள் பல்கலைகழகத்தில் புதியதாக எந்த பணியிடத்தையும் நிரப்பக் கூடாது என உயர் கல்வித்துறையில் இருந்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பணம் பெற்ற தற்காலிக ஊழியர்களிடம் உங்களை முதற்கட்டமாக தொகுப்பூதிய ஊழியர்களாக மாற்றுகிறோம், விரைவில் பணி நிரந்தரம் செய்து விடுவோம் என கூறி சமாளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

கணபதி கைதாகி உள்ள நிலையில் பணிநிரந்தரத் துக்கு பணம்  கொடுத்த ஊழியர்கள் பரிதவித்த வண்ணம் உள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களிடம் விசாரணை நடத்துவார்களோ? என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. 

இதற்கிடையே, பேராசிரியர் பணிநியமனங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.  அதில் பணி நியமனங்களில் நடந்த விதிமீறல்கள் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் பணி நியமனத்திற்கு 2016-ல் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி மீது 20 பேர் புகார் வந்துள்ளன.

லஞ்சம் வாங்கியதாக கைதான கணபதி ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி  செய்தது.


#BailPlea #BharathiarUniversityVC #Ganapathy

Next Story