சிகிச்சையின்போது ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை விவேக் விசாரணை ஆணையத்தில் தகவல்


சிகிச்சையின்போது ஜெயலலிதாவை  நேரில் பார்க்கவில்லை விவேக் விசாரணை ஆணையத்தில் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2018 10:58 AM GMT (Updated: 13 Feb 2018 10:58 AM GMT)

சிகிச்சையின்போது ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. #Jayalalithaadeath #Vivek #InquiryCommission

சென்னை 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமன் நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவின் மரணம்  தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என  
பல்வேறு தரப்பினரிடம்  விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.

சசிகலாவுக்கும் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தன் மீது புகார் கூறியவர்களின் பெயர்கள் மற்றும் புகார் விவரங்கள் ஆகியவை சசிகலா சார்பில் கோரப்பட்டது. அவற்றை வழங்க ஆணையம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வளர்ந்த இளவரசியின் மகனும் ஜெயா டிவி.யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனை இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.  அதன் அடிப்படையில் விவேக் ஜெயராமன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது தான் வெளிநாட்டில் இருந்தேன் என  இளவரசியின் மகன் விவேக் தெரிவித்ததாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  சிகிச்சையின்போது அவரை நேரில் பார்க்கவில்லை எனவும் விவேக் ஜெயராமன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story