காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


காவிரியில்  தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Feb 2018 12:15 AM GMT (Updated: 16 Feb 2018 9:34 PM GMT)

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்துக்கான தண்ணீர் ஒதுக்கீட்டை குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

புதுடெல்லி, 

காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) என்றும், கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.

இதேபோல் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி. என்றும், கேரளாவின் பங்கு 30 டி.எம்.சி. என்றும், புதுச்சேரியின் பங்கு 7 டி.எம்.சி. என்று தீர்ப்பில் கூறி இருந்தது.

மேலும் காவிரி நதிநீர் பங்கீடு முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இறுதி விசாரணை கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. வெவ்வேறு தேதிகளில் 28 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம், கே.வி.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதேபோல் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், ஷரத் ஜாவ்ளி, ஷியாம் திவான், மோகன் கர்த்தார்க்கி ஆகியோரும், கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தாவும், புதுச்சேரி அரசின் சார்பில் மூத்த வக்கீல் நம்பியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான இறுதி வாதங்கள் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்படுவதாகவும், கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி.யில் இருந்து 284.75 டி.எம்.சி.யாக அதிகரிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். அதாவது தமிழகத்துக்கான தண்ணீரின் பங்கு 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு, அந்த தண்ணீர் கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் காலாவதி ஆகவில்லை. அவை இன்றும் செல்லுபடி ஆகும். 1956-ம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு உருவான மாநிலங்கள் எவையும் 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறவில்லை.

அரசியல் சாசனத்தின் 363-வது பிரிவின்படி, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் தொடர்பாக ஏற்படும் ஒப்பந்தங்களில் கோர்ட்டுகள் தலையிட்டு உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறும் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.

மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் தேசத்தின் சொத்து. எனவே நதிகளுக்கு எந்த மாநிலமும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது. அந்த வகையில், காவிரி நதியின் மீதும் எந்தவொரு மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை காவிரி நடுவர் மன்றம் நிர்ணயம் செய்த வேளாண்மை பாசனத்துக்கான பரப்பளவு சரியான அளவில் கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்துக்கு 30 டி.எம்.சி. மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு 7 டி.எம்.சி. என்று காவிரி நடுவர் மன்றம் பங்கிட்டு அளித்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். இந்த இரு மாநிலங்களுக்கும் மேலும் அதிக அளவில் தண்ணீர் ஒதுக்கீடு செய்யத்தேவை இல்லை.

தமிழ்நாட்டில் காவிரி படுகையில் சுமார் 20 டி.எம்.சி. அளவில் கிடைக்கும் நிலத்தடி நீரை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதில் இருந்து தமிழகம் 10 டி.எம்.சி. தண்ணீரை எடுத்துக்கொள்ள முடியும். எனவே இதை கணக்கில் கொண்டே தமிழ்நாட்டின் பங்கில் 14.75 டி.எம்.சி. குறைக் கப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு இனி கர்நாடகம் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும். காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு இனி 404.25 டி.எம்.சி.யாக இருக்கும்.

கர்நாடகத்தின் குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் தேவையை நடுவர் மன்றம் முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப் படுகிறது. இதில் பெங்களூரு நகரத்தின் குடிநீர் பயன் பாட்டுக்காக 4.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. எனவே இனி காவிரி நீரில் கர்நாடகத்துக்கான பங்கு 284.75 டி.எம்.சி. ஆக இருக்கும்.

இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைப்பது குறித்து தங்களின் முடிவுக்கு உட்பட்டது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கது அல்ல. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நோக்கத்துடன் நதிநீர் பங்கீட்டின் அளவு அமைய வேண்டும்.

தனது தீர்ப்பின் அடிப்படையில் நதிநீர் பங்கீடு வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் சரியானபடி செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்த செயல்திட்டத்தை காவிரி நடுவர் மன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் பிற்காலத்தில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இருக்கும் நோக்கில் உருவாக்கப்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.

எனவே, காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக எந்த காலஅவகாச நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story